Thursday, 24 March 2011

வணக்கம் - பதிவின் நோக்கம்

வணக்கம்,

என் பெயர் ஜெகதீஸ்வரன்.பிறந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம். பிறந்த ஆண்டு - 1982.
பள்ளிக் கல்வி - புதுக்கோட்டை
கல்லூரிக் கல்வி - தியாகராஜா பொறியியல் கல்லூரி, மதுரை.
வசிக்கும் முகவரி - நெற்குன்றம், அம்பத்தூர் தொகுதி, சென்னை.
தொலைபேசி எண் - 9600136110.
மின்னஞ்சல் - djagadhees@makkalsakthi.net

என்னுடைய வாழ்க்கையை நான் துவங்கியபோது நான் பார்த்த உலகம் வேறுவிதமாய் இருந்தது. சென்னை சிக்னல்களில் என்னிடம் கையேந்தும் குழந்தைகள், மழை வந்தால் மானமிழந்து தெருவுக்கு வரும் ஏழைக் குடும்பங்கள், அரசு பள்ளிகளில் உட்கார இடமின்றி வகுப்பின் வெளியே நிற்கும் குழந்தைகள், யாருமே போகமுடியாமல் இருந்த கழிப்பறைகள், ஆசிரியர்களுக்கு மட்டும் அமைந்த கழிப்பறைகள், மது கிண்ணங்கள் வாசலில் கிடக்கும் பள்ளிகள், பள்ளி செல்லும் வயதில் மதுபான கடையில் வேலை செய்யும் குழந்தைகள், கண் முன்னே காணாமல் போன ரேஷன் பொருட்கள், தேர்தலுக்காக மட்டும் முளைக்கும் வீதிகள், முதியவரும், ஊனமுற்றோரும் ஏற முடியாத அரசு போக்குவரத்து வாகனங்கள்........இன்னும் ஏராளம்..ஏராளம்.

நான் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கினேன். அதை பதிவு செய்ய லஞ்சம் கொடுத்தேன். எங்களால் முடிந்தவரை குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை, படிப்புதவி செய்து வருகிறோம். என் நண்பர்கள் ஒரு டி-ஷர்ட் நிறுவனம் தொடங்கினார்கள். லஞ்சம் கொடுத்தோம் - VAT ID பெற, தபால் துறை அதிகாரி நிறுவன முகவரியை சரி பார்க்க, அஞ்சல்காரர் அவரை அழைத்து வர - எல்லோரும் சொன்ன ஒரே வாக்கியம் - நல்லது. எல்லா Documentsம் உங்கள்ட்ட பக்காவ இருக்கு.

பிறகு ஏன் லஞ்சம்? அஞ்சல்காரர் சொன்னார் - சார், நிறைய செக் எல்லாம் வரும்..எல்லாம் சரியா வரணுமில்ல....உங்க இஸ்டம். பாத்து பண்ணுங்க.

இந்த எல்லா ப்ரச்சனைகளுக்கும் ஏதேனும் தீர்வு உண்டா..? நம்பிக்கை மட்டுமே என்னிடம் இருந்தது.
(Hope is a good thing. Hope is the best thing to have)

இந்த நம்பிக்கை உண்மையாக வேண்டுமானால் நாம் அடுத்த படிக்கு நம்மை தயார் செய்தல் வேண்டும் என நினைத்தேன். வாக்காளர் வேட்பாளராக மாறவேண்டும் என முடிவு செய்தேன்.

என்னுடைய நம்பிக்கைகளை திரு.எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு கட்சியாக மாறி பர்கூர்,திருச்செந்தூர் மற்றும் பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட மக்கள் சக்தி கட்சியினிரிடம் எடுத்துரைத்தேன். அவர்கள் என்னை அம்பத்தூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்தனர்.

21-03-2011ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தேன். தற்போது அதற்கான வேலைகளின் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய தேர்தல் முடிவு எவ்வாறாக இருப்பினும், என்னுடைய ஒரே குறிக்கோள் அம்பத்தூர் தொகுதியை சிறப்பாக மாற்றுவதே.

என்னை போல் எத்தனையோ ஆர்வலர்கள் இதே கருத்தோடு இருக்கலாம். இந்த பதிவுத்தளம் நம் அனைவருக்கும் ஒரு அறைக்கூவல்.
வாருங்கள் - நம் தொகுதியை உயர்த்த பாடுபடுவோம்.